உள்ளாட்சி தேர்தலில் போட்டி உறுதி - கமலஹாசன்
கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் கட்சி கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலிலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டது.
பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்ற அந்த கட்சி சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் வெற்றியை நெருங்கி வந்து குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.
தேர்தலுக்கு பின்னர் கட்சியின் தலைமை நிர்வாகிகள் சிலர் வெளியேறினார்கள். இதனையடுத்து கட்சியின் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வந்த கமலஹாசன் அடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு உற்சாகமாக தயாராகும்படி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15-ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையமும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழக, பாண்டிச்சேரி நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோருடன் கமலஹாசன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணியுடன் போட்டியிடுவதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்வதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து நிர்வாகிகளிடம் கமலஹாசன் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் இரு பெரும் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என்றும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதி என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.