ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை - அன்பில் மகேஷ்
சட்டசபையில் உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது,
ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படவில்லை. அரசுக்கு காழ்ப்புணர்ச்சி கிடையாது, அப்படி இருந்திருந்தால் அம்மா உணவகம் இருந்திருக்காது. இந்த அரசுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என கூறினார்.
உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசும் போது, பெயர் வைக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம், சென்னையில் உள்ள இசைப் பல்கலைக்கழகம் ஜெயலலிதா பெயரில் தான் தொடர்ந்து இயங்கி வருகிறது என கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது தொடர்பாக பேசிய போது ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழ்நாட்டையே காணவில்லை என்றும், அதை மீட்டெடுக்கும் பணியில் புதிய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.