
கிம் ஜாங் அன்னின் தலையில் காணப்பட்ட பேண்ட் எய்ட் - கிளம்பியது அடுத்த சர்ச்சை
அண்மை காலமாகவே வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து சர்வதேச ஊடகங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் கிம் ஜாங் அன் பல மாதங்கள் வெளியுலகில் தலை காட்டாமல் இருந்து வந்தார். இதனால் அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், இறந்து விட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் சர்வதேச ஊடகங்களில் உலா வந்தன. எனினும் கிம் ஜாங் உன் சில மாதங்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கிம் ஜாங் அன் சமீபத்திய புகைப்படம் ஒன்று அவரது உடல்நிலை குறித்து மீண்டும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை நடந்த வடகொரிய ராணுவ கூட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொண்டார். அப்போது அவரது தலையின் கீழ் பெரிய அளவில் பேண்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் கிம் சமீபத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்து கொண்டாரா? என்பது போன்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து வடகொரியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ பதில் வெளிவரவில்லை.