ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து
ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
ரம்மி, ட்ரீம் லெவன் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் இளைஞர்கள் அடிமையாகி பணத்தை இழப்பதுடன், தற்கொலைகளும் செய்து கொள்வது அண்மை காலமாக அதிகரித்து வந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கையினை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டத்தை இயற்றியது.
இதனிடையே, ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தன.
இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பிறப்பித்துள்ள சட்டம் முழுமையாக இல்லை என்றும், போதுமான காரணங்களை விளக்காமலும் இருப்பதாகக் கூறி, அந்த சட்டம் செல்லாது என்று நீதிபதிகள் அறிவித்தனர். மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு எந்தவித தடையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, உரிய விதிகளை உருவாக்கி, ஆன்லைன் சூதாட்டங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.