தமிழகத்தில் பிரசித்திபெற்ற முருகன், அம்மன் கோவில்களில்பக்தர்கள் தரிசனத்துக்கு தடை
தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தியது. சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 இடங்களில் கடைகளை அடைக்க மாநகராட்சி நிர்வாகம் திடீரென்று நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
காவிரி பாயும் மாவட்டங்களில் ஆடிப்பெருக்கு விழா வருகிற 3-ந் தேதி (நாளை மறுதினம்) விமரிசையாக நடைபெறும். அந்த நாளில் காவிரியில் புனிதநீராடி பூஜை செய்வதற்காக ஏராளமானவர்கள் கூடுவார்கள். மேலும் காவிரி கரையோரம் உள்ள கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இதுதவிர ஆடி வெள்ளிக்கிழமை அன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரளுவார்கள். ஆடி அமாவாசையான வருகிற 8-ம் தேதியும் மக்கள் அதிக அளவில் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கூடுவார்கள்.
கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் இந்த நாட்களில் மக்கள் கூடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.