சீனாவில் பரவும் ‘குரங்கு பி’ வைரஸால் முதல் பலி
கொரோனாவின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், குரங்கு பி வைரஸ் என்ற புதிய வைரஸ் பரவி வருவது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டு பின்னர் உலகநாடுகளையே நிலைகுலையச் செய்த கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் உலகநாடுகளை உலுக்கி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து, ஆல்பா, பீட்டா ஆகிய பெயர்களில் உருவெடுத்து வருகிறது.
சீனாவில் ‘குரங்கு பி’ வைரஸ் என்னும் புதிய வைரஸ் தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இரு குரங்குகளுக்கு உடற்கூராய்வு செய்த மருத்துவர் ஒருவர், குமட்டல், வாந்தி, காய்ச்சல், நரம்பு பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கடந்த மே 27ல் உயிரிழந்தார். பிறகு, அவரது எச்சில், ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில், அவருக்கு ‘குரங்கு பி’ வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மகாக்ஸ் வகை குரங்குகளில் இருந்து இந்த வைரஸ் தொற்று 1932ல் கண்டறியப்பட்டது. ‘குரங்கு பி’ வைரஸால் இறப்பு சதவீதம் அதிகமாகும். மனிதர்களை ‘குரங்கு பி’ வைரஸ் தாக்கும் போது 1 முதல் 3 வாரங்களில் அறிகுறிகள் தென்படும். பின் மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.