கென்யாவில் தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர்- 13 பேர் பலி
கென்யாவின் மேற்கு பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து, அதிலிருந்து பெட்ரோல் வெளியேறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெட்ரோலை பிடித்து செல்வதற்காக கேன்களுடன் அங்கு திரண்டனர்.
அப்போது பெட்ரோல் டேங்கர் திடீரென தீப்பற்றி வெடித்து சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ பரவியதால் மக்களால் தப்பிச் செல்ல முடியவில்லை. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 11 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிரே பால் ஏற்றி வந்த லாரியுடன் மோதாமல் இருப்பதற்காக பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர், ஸ்டியரிங்கை திருப்பியபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கென்யாவில் ஒருவழி நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் வேகமாக செல்வதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. ஆண்டுக்கு 3000 பேர் சாலை விபத்துகளில் இறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.