ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட கலந்துரையாடல்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் (16) அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது அமைச்சின் ஊடாக கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பான விடயங்கள் அமைச்சின் அதிகரிகளினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்கப்பட இருக்கும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மற்றும் குறைப்பாடுகள் காணப்பட்டன. அக்குறைப்பாடுகளை வெகு விரைவில் நிவர்த்தி செய்து மக்களிடம் கையளிப்பது தொடர்பாகவும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் செயற்பட்டு வரும் ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலையரங்கு கட்டிடத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகார சபையின் ஊடாக ஆரம்பிக்கப்படவிருக்கும் நகரங்கள் தோறும் நூலகங்கள் அமைக்கும் விசேட வேலை திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.