தமிழகத்தில் 12 நாள் ஊரடங்கு நீட்டிப்பு: ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 19-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய் தொற்று நிலையை கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 31-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.
* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)
* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்து
* திரையரங்குகள்
* அனைத்து மதுக்கூடங்கள்
* நீச்சல் குளங்கள்
* பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்
* பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்
* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்
* உயிரியல் பூங்காக்கள்
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
* தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினை கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITIs and Industrial Schools), தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
* மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாக பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.