ஒரு கோடி சப்ஸ்க்ரைபர் பெற்ற யூட்யூப் சேனல் – முதல்வரிடம் 10 லட்சம் நிதி
யூடியூப் மூலம் கிராமத்து சமையலை செய்து அசத்தி வரும் VILLAGE COOKING CHANNEL கொரோனா நிதியாக ரூ.10 லட்சம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சமூக வலைதளமான யூடியூப் தற்போது பலருக்கும் வருவாய் ஏற்படுத்தும் சேனலாக மாறியுள்ளது. பலர் தங்கள் தொழிலுக்காக உபயோகப்படுத்தி வரும் நிலையில் பலரும் லட்ச கணக்கில் வருவாயை ஈட்டி உரிமையாளர்களாக மாறியுள்ளனர்.
மண் மணம் மாறாத சமையல் செய்யும் வீடியோக்களை பகிரிந்து வரும் VILLAGE COOKING CHANNEL ஒரு கோடி Subscriberகளை கடந்து சாதனை படைத்து பெரும் ரசிகர் கூட்டத்தை கவர்ந்து வருகிறது.
புதுக்கேட்டையை சேர்ந்த இந்த VILLAGE COOKING CHANNEL குழுவில் உள்ள 6 பேர் 6 மாதம் விவசாய தொழில் புரிந்து மீதமுள்ள 6 மாதங்களில் கிடைத்த வேலைகளை செய்து வந்தனர். பின்னர் 2018ஆம் ஆண்டு VILLAGE COOKING CHANNEL என்ற யூடியூப் சேனலை தொடங்கி சமையல் வீடியோக்களை பகிரத் தொடங்கினர்.
இவர்களின் சமையலுக்கு முக்கிய காரணம் அந்த குழுவில் உள்ள 76 வயதான பெரியதம்பி. தனது மண் மணம் மாறாத சமையலால் ரசிகர் கூட்டத்தை கவர்ந்தவர். எத்தனையோ சமையல் சேனல்கள் வந்தாலும் இவர்களது சமையல் சேனலுக்கு எப்போதும் மவுசு அதிகம்.
வெகுளியான பேச்சு, மண் மணம் மாறாத சமையல் முறை, திறந்த வெளியில் பிரம்மாண்ட சமையல் செய்து அசத்தி வரும் இவர்களது சேனலுக்கு ஒரு கோடிக்கு மேல் ரசிகர்கள் உள்ளனர். ஒரு கோடி subscriber தாண்டிய முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையை பெற்றுள்ளது VILLAGE COOKING CHANNEL.
தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியே நேரில் வந்து இவர்களது சமையலை ருசித்து பாராட்டியுள்ளார். மேலும் ஒரு கோடி subscriber எட்டியுள்ளதால் இந்த குழுவுக்கு டைமண்ட் பட்டன் அங்கீகாரம் அளித்து கவுரவம் சேர்த்துள்ளது யூடியூப் நிறுவனம்.
சமையல் செய்து உணவுகளை காப்பகங்களுக்கு பகிரிந்தளிக்கும் இந்த குழுவினர், யூடியூப் மூலம் கிடைத்த வருவாயில் 10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிவாரண தொகையை இந்த குழுவினர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அளித்துள்ளனர்.