குழந்தைகள் விற்பனை- தலைமறைவான காப்பக அதிபர்
மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தின் உரிமையாளர் சிவக்குமார். இங்கு முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் என 80-க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் தனது கிராமத்தில் ஆதரவின்றி தவித்த ஐஸ்வர்யா (வயது22) மற்றும் அவரது 3 குழந்தைகளை இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவின் 3-வது குழந்தை மாணிக்கம் கொரோனா தொற்றுக்கு பலியாகி விட்டதாகவும், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் தத்தனேரி சுடுகாட்டில் குழந்தை உடலை புதைத்து விட்டதாகவும் காப்பகத்தில் இருந்து அசாருதீனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அனுப்பிய ஆவணங்கள் மீது அசாருதீனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் போலீசார் காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.அப்போது பல்வேறு முரண்பட்ட தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து விசாரிக்க சிவக்குமார், மதார்ஷா ஆகியோரை தொடர்பு கொண்டபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.இதனால் மேலும் சந்தேகம் அடைந்த மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் சண்முகம், பாண்டியராஜன், சாந்தி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கணேசன், சமூக நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா ஆகியோர் அடங்கிய குழு அதிரடி விசாரணையில் இறங்கியது.குழந்தையின் தாயார் ஐஸ்வர்யாவிடம் விசாரித்தபோது, கடந்த 13-ந்தேதி எனது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாகவும் காப்பக நிர்வாகிகள் தெரிவித்தனர். பின்னர் குழந்தை இறந்து விட்டதாகவும், அதனை அடக்கம் செய்து விட்டதாகவும் கூறி என்னை அழைத்து சென்று ஒரு இடத்தை காண்பித்தனர். அங்கு இறுதிச்சடங்கு செய்யும்படி கூறினர். அதை புகைப்படமாக எடுத்துக் கொண்டனர். நான் எனது குழந்தையை 13-ந்தேதிக்கு பிறகு பார்க்கவில்லை என தெரிவித்தார்.அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மாநகராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி கொடுத்ததாக காப்பக நிர்வாகிகள் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதித்தனர். இதில் தத்தனேரி சுடுகாட்டில் மாணிக்கம் உடல் புதைக்கப்பட்டதற்கான ரசீது எண் கடந்த மே மாதம் 75 வயது முதியவர் ஒருவர் எரிக்கப்பட்டதற்கான ரசீது எண் என தெரியவந்தது. இதன் மூலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடி நடந்து இருப்பது கண்டறியப்பட்டது.
குழந்தை உடலை புதைத்ததாக கூறப்பட்ட இடத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் இறந்த பெண் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.