தமிழக டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமனம்
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று (புதன்கிழமை) ஓய்வு பெறுகிறார்.
அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ்.அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே தேர்வு செய்து பணி அமர்த்தி உள்ளார். அந்த வகையில் திறமை மிக்க சைலேந்திரபாபுவை தமிழக காவல்துறையில் உயர்ந்த பதவியான டி.ஜி.பி.பதவியில் அமர்த்தி அவர் அழகு பார்த்துள்ளார். அவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். சைலேந்திரபாபு பன்முக திறமை வாய்ந்தவர். தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரி ஆவார். சட்டம்-ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி, போலீஸ், பொதுமக்கள் நலத்தை பேணுவதிலும் சரி அவருக்கு, நிகர் அவரே. நல்ல பேச்சாளர். இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி. போதிய அதிகாரம் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்ட போதும், அவர் துவண்டு போகாமல் அதில் கூட சாதித்து காட்டி உள்ளார். தற்போது அவர் ரெயில்வே டி.ஜி.பி.யாக பதவியில் உள்ளார்.
இன்று (புதன்கிழமை) பகல் 12 மணி அளவில் சைலேந்திரபாபு தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, திரிபாதி விடைபெறுகிறார். இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதிக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.
புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்கவிருக்கும் சைலேந்திரபாபு போலீஸ் துறையில் ஆற்றிய சாதனைகள் ஏராளம். தனது 25-வது வயதில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு பெற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தமிழக காவல்துறையில் 1989-ம் ஆண்டு அடி எடுத்து வைத்தார்.