
மனைவியை கொன்று உடலை சூட்கேஸில் மறைத்து வைத்த போலி சமூக ஆர்வலர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த மென்பொறியாளர் புவனேஸ்வரி. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருக்கும் புவனேஸ்வரி கை நிறைய சம்பாதித்து வந்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புவனேஸ்வரி, ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவரை திருமணம் செய்தார். அவர் கணவரோ ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்திக் கொண்டு தன்னை சமூக ஆர்வலராக உலகிற்கு காட்டி வந்தார்.
சுய விளம்பரத்திற்காக அவர் அவ்வப்போது தொலைக்காட்சிகளில் பேட்டிகள் கொடுப்பது, நிகழ்ச்சிகளை நடத்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். தன்னுடைய சொந்த செலவுக்கான பணத்தை மனைவி புவனேஸ்வரியிடமிருந்து வாங்கி செலவு செய்து வந்தார்.
சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஊர் சுற்றுவதுடன் நான் சம்பாதித்து வரும் பணத்தையும் வாங்கி வீண் செலவு செய்கிறாய் என்று புவனேஸ்வரிக்கும் ஸ்ரீகாந்த் ரெட்டிக்கும் இடையே அப்போது பிரச்சினை ஏற்பட்டு வந்தன. புவனேஸ்வரிக்கு கடந்த ஓராண்டு முன்பு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பின்னரும், கணவர் ஸ்ரீகாந்த் ரெட்டி, வேலைக்கு செல்லாமல், சமூக ஆர்வலர் என்ற போர்வையில் மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்.
கடந்த 4 நாட்களுக்கு முன் திருப்பதியில் அவர்கள் வசித்து வந்த அப்பார்ட்மெண்டில் மனைவி புவனேஸ்வரியை கொலை செய்த ஸ்ரீகாந்த் ரெட்டி அவருடைய உடலை ஒரு பெரிய சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்று திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் வைத்து எரித்து விட்டார்.
ஆனால் உறவினர்களிடம், புவனேஸ்வரிக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். எனவே அவருடைய உடலை ஒப்படைக்காமல் எரித்து விட்டனர் என்று நாடகமாடினார்.
அவருடைய செயல்கள் மீது சந்தேகம் அடைந்த புவனேஸ்வரி உறவினர்கள், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வந்த போலீசார் அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது போலீசாரே உறைந்து போய்விட்டனர்.
அந்த கேமரா பதிவில் மனைவி புவனேஸ்வரியின் உடலை சூட்கேசில் அடைத்து வைத்து எடுத்து சென்றது தொடர்பான காட்சிகள் இருந்தன. ஒரு கையில் கைக்குழந்தையையும் மறுகையில் மனைவியின் உடலை சூட்கேசில் வைத்து இழுத்து சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதன் அடிப்படையில் விஜயவாடாவில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். தங்களுடைய ஒரு வயது மகளை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மனைவியின் உடலை சூட்கேசில் மறைத்து எடுத்துச் சென்று எரித்த கொடூர கணவனுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.