
இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் விடுத்த கோரிக்கை
பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து, மற்றும் கொரோனா முடக்கம் போன்றவற்றினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செய்பாடுகளும் கடற்றொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரினால் இந்தியத் தூதுவரிற்கு எடுத்துக் கூறப்பட்டது.
மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்கள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர், வாழ்வாதார சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பினை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கை மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தியா விரைந்து உதவுவதை நன்றியுடன் நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.