
விவசாயிகள் உரமின்றி தவிக்கின்றனர்
அரசாங்கத்தின் திட்டமற்ற செயலினால் நாட்டுக்கே உரமூட்டுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளரும் கொட்டகலை வர்த்தக சங்க தலைவருமான புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகள், தொழிலின்றி வறுமை நிலையில் உள்ள தொழிலாளர் குடும்பங்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் என சுமார் 2,500 இற்கும் மேற்பட்டவர்களுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதகிருஸ்ணன் அவர்களின் நிதியில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றனர்.
அக்கரபத்தனை பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல் திட்டம் இன்று (27) புஸ்பா விஸ்வநாதன் தலையமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கப்பல் எரிந்ததன் காரணமாக இன்று மீனவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இரசாயன உரம் தடை செய்யப்பட்டதன் காரணமாக விவசாயிகள் இன்று பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் இன்று உரம் இல்லாததன் காரணமாக விவசாய பாதிக்கப்பட்டு அவர்களின் முழு குடும்பமும் நடுத்தெருவுக்கு வரும் நிலை உருவாகியுள்ளன.
தோட்டத்தொழிலாளர்களை பொறுத்த வரையில் இரசாயன உரம் இல்லாததன் காரணமாக இன்று தேயிலை கொழுந்து குறைவடைந்துள்ளது. விவசாயத்துறையினருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதன் மூலம் பல பிரச்சினைககளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.