
கொரோனா 3வது அலை தீவிரமாக இருக்காது- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த ஆண்டு பரவ தொடங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இறுதி வரை கொரோனா முதல் கட்ட அலை பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது.
முதல் அலை ஓய்ந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த மாதம் வரை 2-வது அலை கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொரோனா முதல் அலையை விட 2-வது அலையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. கொரோனா வைரசின் உருமாற்ற வீரியம் பெரும்பாலானவர்களிடம் நுரையீரலை தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியதால் உயிரிழப்பை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது 2-வது அலை ஓய்ந்து வரும் நிலையில் 3-வது அலை வரும் என்ற அச்சம் நிலவுகிறது. ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 3-வது அலை தொடங்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கூறி உள்ளனர். ஆனால் சிலர் செப்டம்பரில் 3-வது அலை கடுமையாக இருக்கும் என்று எச்சரித்து உள்ளனர்.
டெல்டா வைரஸ் கொரோனா 2-வது அலைக்கு காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாறி டெல்டா பிளஸ் ஆக வீரியம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக 3-வது அலையில் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியானது. குறிப்பாக குழந்தைகளை 3-வது அலை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டதை நிபுணர்கள் மறுத்தனர். குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் என்பதில் உண்மை இல்லை என்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளும், லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகளும் ஒருங்கிணைந்து 3-வது அலை தொடர்பான புதிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
2-வது அலை போல 3-வது அலை கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்பட்டு உள்ளது. 3-வது அலையின் தாக்கமும் தீவிரமாக இருக்காது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
நாடுமுழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் 3-வது அலையில் இருந்து பெரும்பாலானவர்கள் தப்ப முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதை தவிர ஒட்டுமொத்த சமுதாய அமைப்பிலும் நோய் எதிர்ப்பு சக்தி அளவு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன்காரணமாக 3-வது அலையை எளிதில் சமாளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர். விஞ்ஞானிகளின் இந்த கருத்து ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.