கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையிலிருந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த இருவேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் குறித்த இரு வழக்குகளும் எதிர்வரும் 15ம் திகதி விசாரணைகளிற்காக தவணையிடப்பட்டது.கரைச்சி பிரதேச சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பா.லெனின்குமார் விசாரணைகளிற்கு எடுத்துக்கொண்டார். குறித்த மனுவை விசாரணைகளிற்கு எடுத்துக்கொண்ட நீதவான், ஆடைத் தொழிற்சாலைகளை மூடிதான் தொற்று நோயினை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற விளக்க அறிக்கையினை தவணையிடப்பட்ட 15ம் திகதி மன்றில் அறிக்கையிடுமாறு இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 15ம் திகதி தவணையிடப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையிலிருந்து சமூக தொற்று ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக ஆடைத் தொழிற்சாலையை மூடுமாறு பொது மக்கள் 6 பேர் மனு ஒன்றை இன்று சட்டத்தரணிகள் ஊடாக சமர்ப்பித்தனர்.குறித்த மனுவினையும் ஏற்றுக்கொண்ட நீதவான், எதிர்வரும் 15ம் திகதி விசாரணைகளிற்காக தவணையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.எதிர்வரும் 15ம்திகதி சுகாதார தரப்பினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், இரு வழக்குகளும் அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.