கொரோனாவும் குறைந்தது, பரிசோதனையும் குறைந்தது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
வரும் 14ஆம் தேதி சென்னையில் அதிமுக எம்எல்ஏ கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கூட்டம் நடத்த அனுமதி வேண்டி டிஜிபி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் அதிமுகவை சேர்ந்தவர் இல்லை. இதை எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் என கூறினார்.
அ.தி.மு.க.வுக்குப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருடன் செயல்படுகிறது. இருவரும்தான் கட்சியை வழிநடத்துவர். நாங்கள்தான் அ.தி.மு.க. என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. இரட்டை இலை எங்களிடம்தான் இருக்கிறது, சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்றும் இதே நிலை தொடரும் என கூறினார்.
தமிழகத்திற்கு தடுப்பூசியை அதிகரித்து தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எதிர்க்கட்சி கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார் என புகழாரம் சூட்டினார்.
தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் இரண்டு லட்சம் தடுப்பூசி போடுவதாக கூறுகின்றனர், ஆனால் எங்கு போட்டுள்ளனர் என தெரியவில்லை.
திமுகவினர் 39 எம்பிக்களை கையில் எதற்காக வைத்துள்ளனர், மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் வெற்று கடிதங்களை எழுதிவருகின்றனர். கொரோனா குறைந்ததாக சொல்கின்றனர், ஆனால் பரிசோதனை செய்தால்தானே கொரோனா இருக்கா இல்லையா என்பது தெரியும் எனவும் குற்றம்சாட்டினார்.