
பாஜகவுக்கு தாவிய காங்கிரஸின் இளம் நிர்வாகி - அதிர்ச்சியில் சோனியா
உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸின் இளம் நிர்வாகி ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மீண்டும் தேர்தலை சந்திக்க இருப்பதாக அம்மாநில பாஜக அறிவித்துள்ளது. எனவே, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றப் போவது உறுதி என பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தை இப்போதே தொடங்கிய பாஜக, உத்தரப்பிரதேசத்துக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அடுத்தடுத்து படையெடுத்து வருகின்றனர்.
எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் காங்கிரசும் ஈடுபட்டு வருகிறது.
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு நெருக்கமானவரும், 30 ஆண்டுகால பணி அனுபவம் பெற்ற முன்னாள் தலைமை செயலர் அனுப் சந்திர பாண்டேவை தேர்தல் ஆணையாளர்களில் ஒருவராக மத்திய பாஜக நியமித்துள்ளது. இது பெரும் விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இளம் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜிதின் பிரசாதா, டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியையும், பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி அக்கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, 23 தலைவர்கள் கடிதம் எழுதியவர்களில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.