
50 ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவுக்கு பயணிக்கிறார் மன்னர் சார்லஸ்
மன்னர் சார்லஸ், சுமார் 50 ஆண்டுகளில் முதன்முறையாக கனடாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மன்னர் சார்லசும் ராணி கமீலாவும், இம்மாதம், அதாவது, மே மாதம் 26ஆம் திகதி கனடா செல்ல இருக்கிறார்கள். கனடாவில் தேர்தல்களுக்குப் பிறகு நாடாளுமன்றம் துவங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கனடா செல்கிறார் மன்னர்.
1977ஆம் ஆண்டு ராணி எலிசபெத் நாடாளுமன்றம் துவங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குப் பிறகு, இப்போதுதான் இப்படி ஒரு சம்பவம் நடக்க இருப்பதால், இது வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டே இருந்த விடயம் மன்னருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, நாடாளுமன்ற துவக்க விழாவில் கலந்துகொள்ளும் அதே நேரத்தில், கனடா தன் கட்டுப்பாட்டிலிருக்கும் நாடு என்பதை டிரம்புக்கு நினைவூட்டுவதற்காகவும் மன்னர் சார்லஸ் கனடா செல்கிறார் என்று கூறலாம்.