
தேசிய ஒற்றுமைக்கும் தீங்கு விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை
சமூக வலைதளங்களில் உரிமையாளர் இல்லாத கணக்குகள், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு வழிகளில் நாட்டிற்கும், மக்களுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
´சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை புலனாய்வு செய்வதற்காக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தை நியமித்துள்ளதாக நேற்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
உண்மையிலேயே, சமூக ஊடகங்கள் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா´ என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.