
சவால்களை பொருட்படுத்தாது முன்னோக்கிச் செல்லுங்கள் - ஜனாதிபதி
சேதனப் பசளையைப் பயன்பாட்டுக்கு கொண்டும்வரும் போது எதிர்நோக்கும் சவால்களைப் பொருட்படுத்தாது, மக்களின் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன்வாய்ந்த பிரஜைகளை உருவாக்குவதற்கு, நச்சுத்தன்மையற்ற உணவுக்கான மக்களின் உரிமைகள், ´சுபீட்சத்தின் நோக்கு´ கொள்கைப் பிரகடனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயத்துறைக்குள் சேதனப் பசளைப் பாவனையைக் கொண்டுவருவது அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடாகும். இந்த நிகழ்ச்சித்திட்டம், சில தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளான போதும், எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று, ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அடுத்த போகம் வரையில் தேவையான உரம் போதுமானளவு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவசாய நடவடிக்கைகளையும் தடையின்றி மேற்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுடன் நேற்று (7) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.