கிளிநொச்சி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரும் படையினரும் பல்வேறு நடவடிக்கை
கிளிநொச்சி நகரில் படிப்படியாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் நடமாடும் பிரிவு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. நேற்று முதல் மக்கள் நடமாட்டம் படிப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றது. இந்த நிலயைில் குறித்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிசாரும் படையினரும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் பிரிவு திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து பொருத்தமற்ற காரணங்களுடன் நடமாடும் மக்களை எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.தொடர்ந்தும் குறித்த நடமாட்டம் அதிகரிக்கு சந்தர்ப்பத்தில் சட்ட நடவடிக்கைகளிற்கு உட்படுத்தப்படுவீர்கள் என பொதுமக்களிற்கு பொலிசாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் வருகின்றது.அதேவேளை ஏ9 வீதியுடன் இணையும் அனைத்து இணைப்பு வீதிகளிலும் படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இரணைமடு சந்தி, டிப்புா சந்தி மற்றும் கரடிபோக்கு சந்தி, பரந்தன் உள்ளிட்ட பகுதிகளில் வீதி அடைகள் அமைக்கப்பட்டு மக்களின் தேவையற்ற நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதுடன், சோதனைகளும் இடம்பெற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.