அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி
அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்வதாக சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா தொண்டர்களுடன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், சென்னையில் அதிமுகவைச் சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார். தமிழகத்தில் கொரோனா தொற்று 4 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, கொரோனா பரிசோதனைகளையும், பரிசோதனை மையத்தையும் அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சி செய்கிறார். சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது. அதிமுக தொண்டர்களுடன் அவர் பேசவில்லை. சசிகலா அதிமுக உறுப்பினர் இல்லை. அவர் அரசியலில் இருந்து விலகிவிட்டதாக ஊடகங்களின் மூலம் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காததற்கு பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரது வீடு கிரக பிரவேச பூஜை இருந்த காரணத்தால் தான் இன்றைய கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. எங்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபடும் இல்லை, எனக் கூறினார்.