மத்திய அரசு என்றுதான் அழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கடந்த சில நாட்களாக மத்திய அரசை ஒன்றிய அரசு என தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் அழைத்து வருகின்றனர். அதேபோல் தமிழகம் என்று அழைக்காமல் தமிழ்நாடு என்றும் அழைத்து வருகின்றனர் என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா என்பது ஒன்றியங்கள் இணைந்த அரசு என்பதும் அதனால் ஒன்றிய அரசு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்றும் அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர். இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மத்திய அரசு என்றுதான் அழைக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஒன்றிய அரசு என்று அழைப்பவர்கள் மத்திய அரசில் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு என்றுதான் அழைத்தார்கள் என்றும் அவர் நினைவுபடுத்தினார். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்பட பலரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு ஆதரவு கருத்துக்களும் எதிர்ப்பு கருத்துக்களும் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.