திடீர் சுகவீனம் - வட மாகாணத்தில் இதுவரையில் 7 பேர் உயிரிழப்பு
வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது
இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் குறித்த 7 பேரும் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இதேநேரம் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் சுவாசப்பையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாகவே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த நோய் காரணி தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்டுள்ளவர்களின் இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் எலிக்காய்ச்சல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நோய் நிலைமை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆ.கேதீஸ்வரன், காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.