மின் கட்டணத்தை குறைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - அநுர தரப்புக்கு நளின் வலியுறுத்து
மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு அவர் இதனைத் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது? வருடத்துக்கு இரு திருத்தங்கள் எனக் காணப்பட்ட முறைமை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் 4 ஆக அதிகரிக்கப்பட்டது.
ஒக்டோபரில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை.
தேர்தல் மேடைகளில் 30 சதவீதமாக மின் கட்டணம் குறைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஆனால் அவ்வாறு 30 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு 3 ஆண்டுகள் செல்லும் என்று வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார்.
மின் கட்டண திருத்தம் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வசந்த சமரசிங்கவுக்கு இல்லை என்பதை கூட அவர் அறியாமலிருக்கின்றார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது என்றார்.
000