ஏப்ரல் 21 தாக்குதல் - அல்விஸ் குழு அறிக்கையை வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது - முன்னாள் ஜனாதிபதி ரணில்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட அல்விஸ் குழு அறிக்கையை ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என வியாக்கியானம் செய்வது அடிப்படையற்றது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தாம் தொடர்பில் கர்தினால் வெளியிடும் அனைத்துக் கருத்துக்களும் அடிப்படையற்றவை எனவும், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆயர்கள் பேரவையே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்போதைய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் தற்போதைய பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரை பழிவாங்கும் நோக்கிலோ அல்லது விசாரணை செய்யும் நோக்கிலோ இந்த அறிக்கை தயாரிக்கப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்களான நிலந்த ஜயவர்த்தன, நந்தன முனசிங்ஹ, லலித் பத்திநாயக, அப்துல் லத்தீப், ரவி செனவிரத்ன உள்ளிட்ட சகல அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்ததாக ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் அப்போதைய முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கை மூலம் பரிந்துரைக்கப்பட்டிருந்ததது.
எனவே, ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட அறிக்கையாக இதனை அர்த்தப்படுத்துவது நியாயமற்றது என ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்தப் பகுதியில் இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் பலமான தகவல் வலையமைப்பைக் கொண்டிருந்த போதிலும், அதே பகுதியில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரின் நடவடிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், தங்களிடம் வலுவான புலனாய்வு வலைமையப்பு இல்லை என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த அறிக்கை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தனக்குக் கிடைத்ததாகவும், ஆனால் ஏப்ரல் 21 தாக்குதலை அரசியலுடன் இணைக்கத் தயக்கம் காட்டி அறிக்கைகளை வெளியிடவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் தொடர்பில் கர்தினால் முன்வைத்;துள்ள அனைத்துக் கருத்துக்களும் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 அறிக்கைகள் தொடர்பில் ஆயர்கள் பேரவை உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்களைக் கருத்தில் எடுத்து ஏப்ரல் 21 அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ரணில் விக்ரமசிங்க தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
00