அமெரிக்கா சென்ற தமிழக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக, நேற்று முன்தினம்(ஆகஸ்ட் 27) இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
சான்பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது எடுத்த புகைப்படங்களை தன் X பக்கத்தில் பகிர்ந்த ஸ்டாலின், அதில், ''தமிழகம் செழுமை பெற அமெரிக்கா வந்துள்ளேன். வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள டைம்ஸ் சதுக்கத்தில், மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக அவரது புகைப்படம் இடம்பெற்றது.
இன்று (ஆகஸ்டு 29) சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகிறார். தொடர்ந்து ஆக. 31 இல் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, செப். 2இல் முதல்வர் சிகாகோ செல்கிறார். அங்கு, அமெரிக்காவில் உள்ள முக்கிய தொழில் நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். இந்த பணிகள் முடிவுற்ற பிறகு செப். 14-ல் முதல்வர் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.