பிளாஸ்ரிக் இடியப்ப தட்டுகளால் புற்றுநோய ஏற்படும் அபாயம் - பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் எச்சரிக்கை
இடியப்பம் அவிக்கப் பயன்படுத்தும் பிளாஸ்ரிக் தட்டுகளால் புற்றுநோய் உட்பட பல்வேறுபட்ட தீமைகளுக்கு ஆளாக நேரிடுமென, பூநகரி பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன் றொனால்ட் தெரிவித்தார்.
அண்மையில் பூநகரி, நாச்சிக்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்திய வேளையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்த போது,
“இடியப்பம் அவிப்பதற்காக பிளாஸ்ரிக்கால் தயாரிக்கப்பட்ட இடியப்ப தட்டுகளை பயன்படுத்துவது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது. இதனால் புற்றுநோய் உட்பட பல தீய விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். இதனை உணர்ந்து பிளாஸ்ரிக் இடியப்ப தட்டு பாவனையை முற்றாக தவிர்க்க வேண்டும்.
சூடான உணவுகளை பிளாஸ்ரிக் பாத்திரங்களில் பேணுதல், பொலித்தீன் பைகளில் சூடான நிலையில் உணவு, கறி பொதியிடல், பொலித்தீன் பயன்படுத்தி இட்லி அவித்தல், லன்ஞ்ரிசுவை உணவு தட்டில் இட்டு சூடான உணவை பரிமாறல் உள்ளிட்டவை சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிப்பவையாகும். இவ்வாறான நடவடிக்கைகளை உணவு உற்பத்திசாலைகள், உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் வீடுகளிலும் முழுமையாக தவிர்க்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000