இலங்கை - இந்திய இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி - தொடரைக் வென்றது இந்தியா
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், சுப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன் இருபதுக்கு 20 தொடரைக் கைப்பற்றியது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
138 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழைந்து 137 ஓட்டங்களைப் பெற்று போட்டியைச் சமநிலை செய்தது.
இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் வாசிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்படி, வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 2 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதல் பந்திலேயே 4 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது
000