பிறப்பில் மட்டுமல்ல, இறப்பிலும் இணைந்த இரட்டை சகோதரர்கள்
உத்தரபிரதேச மாநிலம், மீரட்டில் 3 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து பிறந்தவர்கள் இரட்டை சகோதரர்கள், ஜோபிரெட் வர்க்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரெட் ஜார்ஜ் கிரிகோரி.
இருவரும் ஒன்றாய் பிறந்தார்கள். வளர்ந்தார்கள். படித்தார்கள். என்ஜினீயர் ஆனார்கள். கடந்த மாதம் 23-ஆம் தேதி இந்த சகோதரர்கள் தங்கள் 24-வது பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள்.
ஆனால் கடந்த 1-ஆம் தேதி இருவரையும் பாழாய்ப்போன கொரோனா தாக்கியது. அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருவருக்கும் 10ஆம் தேதி கொரோனா ‘நெகடிவ்’ என வந்து விட்டது.
கடந்த 13-ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஜோபிரெட் வர்க்கீஸ் கிரிகோரி இறந்து விட்டார்.
ஜோபிரெட் இறந்த அதே மருத்துவமனையில் அவரது சகோதரர் ரால்பிரெட் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். ஆனால் மறுநாள் பொழுது விடியவும், அவரும் இறந்து விட்டார்.
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றி வந்த இரட்டை சகோதரர்கள் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், பிந்தைய பாதிப்பாக வந்த நுரையீரல் தொற்றால் உயிரிழந்திருப்பது அந்தக் குடும்பத்தையே தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.