அடுத்த 10 ஆண்டுகளில் உள்நாட்டிலேயே வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றம் ஏற்படுத்தப்படும் - ஜனாதிபதி ரணில் உறுதி
இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு மாறாக உள்நாட்டிலேயே தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இல்லாதுவிட்டால் கல்விக்காகப் பெருமளவு பணத்தைச் செலவு செய்யும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கான பலன் எமது நாட்டுக்குக் கிடைக்காது போகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்..
மேலும் இலங்கை தொடர்ந்தும் வளர்ச்சியடையாத நாடாக இருக்கக் கூடாது. புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவகையில் கல்வி முறையைச் சீர்திருத்த நடவடிக்கை எடுத்து வருவதுடன், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும்.
நாட்டில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய தொழில்நுட்பப் பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு புதிய தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் தலைமுறையினர் அவசியம். புதிய பொருளாதாரம் உருவாக்கப்படாவிட்டால், இந்த நாட்டின் மாணவர்களுக்கு எதிர்காலம் இருக்காது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000