காங்கிரஸ் முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்
தஞ்சை மாவட்டம் பூண்டி பகுதியை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார் (வயது 93). ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களிலும் பூண்டி வாண்டையார் குடும்பத்துக்கு தனி மரியாதை, மதிப்பு பாரம்பரியம் உள்ளது.
பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பத்துக்கு இப்பகுதியில் 1000 ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. தன்னை ஒரு விவசாயி என சொல்லி கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர் இவர் இப்பகுதி மக்களால் கல்வி காவலர், கல்வி வள்ளல் என இன்றளவும் போற்றப்படுகிறார்.
இவர் தஞ்சை மாவட்டம் பூண்டி கிராமத்தில் பூண்டி புஷ்பம் கலை அறிவியல் கல்லூரியை கடந்த 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். இக்கல்லூரியின் தாளாராக இருந்து நடத்தி வருகிறார். இங்கு வருடந்தோறும் 1000 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி அளிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் இதுவரை ஒரு ரூபாய் கூட நன்கொடை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
93 வயதான துளசி அய்யா வாண்டையார் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.