பொருளாதார ரீதியான அபிவிருத்தி சகல மட்டங்களுக்கும் பரவ வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
பொருளாதார ரீதியான எமது மக்களின் அபிவிருத்தி என்பது சகல பிரதேசங்களுக்கும் அனைவருக்கும் ஆறுபோல் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கரணவாய் மண்டான் நீர் ஏரியில் இன்று (17) இறால் அறுவடையை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பொருளாதாரத்தில் எமது மக்கள் அபிவிருத்தியடைந்து வருவது இங்கு மட்டுமல்ல இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் வாழ்விடங்கள் தோறும் ஆறுபோல் பாய்ந்து பரவவேண்டும் என்பதுடன் மக்களின் வாழ்வும் வளமும் எழுச்சியும் பெறவேண்டும் என்றே நான் விரும்புகின்றேன்.மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின், ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் கொள்கை வழி அடிப்படையில் எமது கடற்றொழில் அமைச்சினது செயற்திட்டங்களை நாம் முழுமையாக முன்னெடுத்து வரும் இக் காலகட்டத்தில், உலகமயத் தொற்று அனர்த்தமான கொவிட் - 19 அலை எமது நாட்டு மக்களையும் பாதித்து வருகின்றது,அதற்காக நாம் முடங்கியிருக்க முடியாது அந்த வகையில் எமது மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக எமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி எமது தாயகப் பிரதேசத்திலிருக்கும் வளங்களை அடையாளங்கண்டு, சுய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியும் எமது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்தவேண்டும்.நாளைய எதிர்காலத்தில் எமது இளைய சந்ததியினர் இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதுடன் அந்த வாழ்வியலை அமைத்து கொடுக்க வேண்டிய பாரிய கடப்பாடும் இந்த வரலாற்றுப் பாதை என்மீது சுமத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சரினால் மண்டான் பிரதேசத்தில் இறால் குஞ்சுகள் விடப்பட்ட நிலையில், அவை தற்போது அறுவடைக்கு தயாரகியுள்ளன.இந்நிலையில், அவற்றின் அறுவடை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவினால் இன்று, கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளுடன் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன்மூலம்,குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக நம்பி வாழும் சுமார் 200 குடும்பங்களை சேர்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்பெற்றுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.