இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மலையக சேவையில் விசேட கல்வி நிகழ்ச்சி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மலையக சேவையில் விசேட கல்வி நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் பெயர் ´குறிஞ்சிக் குருகுலம்´ என்பதாகும். இதனை தினந்தோறும் மாலை 6.30 தொடக்கம் இரவு 7.30 வரை மலையக சேவையின் அலைவரிசையில் கேட்கலாம்.
கொவிட் பெருந்தொற்று சூழலில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது நிகழ்ச்சியின் நோக்கம் என மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் திருமதி ஏ.ஆர்.சத்தியேந்திரா தெரிவித்தார்.
ஆரம்பத்தில் 11 ஆம் தர மாணவர்களுக்காக பாடம் நடத்தப்படுமென சத்தியேந்திரா குறிப்பிட்டார். அவர் நேற்று குறிஞ்சிக் குருகுலம் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் பெ.விக்னேஷ்வரன் உரையாற்றுகையில், ஆற்றல் மிக்க வளவாளர்களைக் கொண்டு ஒவ்வொரு பாடமும் போதிக்கப்படும் என்றார். அவர்களில் பாடநூலாக்கல் குழுக்களின் அங்கத்தவர்கள், பரீட்சைத் திட்டமிடல் உத்தியோகத்தர்கள், ஆசிரிய கல்வி ஆலோசகர்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.
´குறிஞ்சிக் குருகுலம்´ நிகழ்ச்சியை கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சு, மத்திய மாகாண கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்துகிறது.
இதனை மத்திய மாகாண நேயர்கள் 90.1, 107.3, 107.5 ஆகிய பண்பலை வரிசைகளில் கேட்கலாம். ஏனைய நேயர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbc.lk ஊடாகவும், அதன் உத்தியோகபூர்வ செயலியான SLBC-App இலும் கேட்கலாம்