“ரெம்டெசிவிரால் எந்த யூஸும் இல்லை” – WHO தலைமை விஞ்ஞானி திட்டவட்டம்
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை அதி தீவிரமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலோனோர் பாதிக்கப்படுகின்றனர். தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தைத் தாண்டிச் செல்கிறது. இந்தச் சமயத்தில் ரெம்டெசிவிர் என்ற மருந்து உயிர் காக்கும் மருந்தாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது. கொரோனா நோயாளிகளை அனுமதித்ததும் அவர்களின் உறவினர்களிடம் ரெம்டெசிவிர் மருத்து வாங்கி வருமாறு மருத்துவர்கள் நிர்பந்திக்கின்றனர்.
முதல் பரவலின்போதே ரெம்டெசிவிர் மருந்துக்குப் பெரிதும் தட்டுப்பாடு நிலவியது. அப்போதே ஏராளமானோர் வாங்கி ஸ்டாக் வைத்துள்ளார்கள். அதற்குப் பின் அம்மருந்து கொரோனாவைக் குணப்படுத்தாது; ஆய்வு முடிவிலும் அது பற்றி கூறப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறிவிட்டனர். ஆனால் இப்போதும் கூட ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இம்மருந்தானது சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனைகளிலேயே கிடைக்கிறது. டிமாண்ட் அதிகரிப்பதால் விடிய விடிய கால் கடுக்க நின்று மருந்தை வாங்கிச் செல்கிறார்கள். இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கில் ரெம்டெசிவிர் மருந்தை சிலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் தனது ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா மருந்துகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஜூலை 2020க்குப் பிறகு புதுப்பிக்கவே இல்லை. இதனால் மருத்துவர்களுக்கு ரெம்டெசிவர் பற்றிய புரிதல் இல்லை. எனவே இது அந்த அமைச்சகத்தின் குறைபாடுதான் என மருத்துவர்கள் சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ரெம்டெசிவர் மருந்தால் எந்த பயனும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர், ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு பயன்படுமே தவிர, குணப்படுத்த உதவாது என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.