ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் - இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று போட்டிக்குத் தகுதி பெற்றது இந்திய அணி
ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சைத் தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 57 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதற்கமைய 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் ஹாரி புரூக் அதிகபட்சமாக 25 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழையும் இரண்டாவது அணியாகத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000