எச்சரிக்கையை மீறி உக்ரெய்னுக்கு தென்கொரியா ஆயுதம் வழங்குமா - மிகப்பெரிய தவறு என்கிறார் புடின் எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரெய்னுக்கு தென்கொரியா ஆயுதம் வழங்கினால் அது மிகப்பெரிய தவறு என விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது புடின் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு தாக்குதலுக்கு இலக்கானால் மற்றொரு நாடு கைகொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் வட கொரியாவின் புதிய உடன்படிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இரு நாட்டிற்குமான ஒப்பந்தம் குறித்து பரிசீலிப்பதாக தென்கொரியா கூறியதையடுத்து புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியா முன்னதாகவே இந்த ஒப்பந்தத்தை அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கண்டனம் வெளியிட்டது.
உக்ரைனுக்கு ஆயுத ஆதரவு குறித்து மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாங் ஹோ-ஜின் கூறினார்.
இதேவேளை, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகவும், அதன் நிலைப்பாடு இந்தப் பிரச்சினையை ரஷ்யா எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொறுத்தது" என்றும் தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கொரியா, உக்ரெய்னுக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு தீர்மானித்தால், ரஷ்யா தென் கொரியாவின் தற்போதைய தலைமை சிரமங்களை எதிர்கொள்ளும் வகையில் தீர்மானங்களை எடுக்க நேரிடும் என புடின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000