தீவிர வலதுசாரிக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும் - மிதவாத கட்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அழைப்பு
பிரான்ஸ் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு எதிராக தங்களுடன் அணிசேர வேண்டும் என்று மிதவாக கட்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி கட்சிகள் அதிகமான இடங்களை தன்வசப்படுத்தின.
பிரான்ஸிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தொகுதியிலும் தீவிர வலது சாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி அதிகமான வாக்குகளைப் பெற்றன.
மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி மிகப் பெரிய வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில், மக்கள் தமக்கு வழங்கும் ஆதரவை நிரூபிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்துவதாக மக்ரோன் அறிவித்தார்.
இவ்வாறிருக்க எதிர்வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 07 என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி தற்போது தக்க வைத்திருக்கும் இடங்களையும் இழப்பதற்கான வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை பாரிஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய மக்ரோன், “ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் மிதவாத கட்சிகள் பெருமளவிலான வாக்குகளைப் பெறவில்லை. இதுதான் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது. இந்தத் தேர்தலில் மிதவாகக் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீவிர வலதுசாரிக் கட்சிகளை தோற்கடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000