நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 20 ஆயிரம் பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 5 ஆயிரத்து 682 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 202 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில், கிழக்கு மாகாணத்தில் மாத்திரம், 4 ஆயிரத்து 804 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஊவா மாகணத்தில் 761 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள் முழுமையாகவும், 361 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழை மற்றும் மண்சரிவு காரணமாக பல வீதிகளின் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளன. அதன்படி, மாத்தளை உக்குவெல – பண்டாரபொல வீதி, மண்சரிவினால் முற்றாக தடைப்பட்டுள்ளது.
மேலும் கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஹுன்னஸ்கிரிய பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையே இதற்குக் காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.