சச்சின் மகள் சாராவின் டீப்பேக் புகைப்படம் இணையத்தில் வைரல்
இந்திய நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா, தற்போது டீப்பேக் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். டீப்பேக் என்பது, உண்மையான நபர்களோடு வேறொருவரின் முக அமைப்பை தொடர்புப்படுத்தி போலியான காணொளி, புகைப்படம் ஆகியவற்றை உருவாக்குவது ஆகும்.
அண்மையில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப் ஆகியோரின் டீப்பேக் காணொளிகள் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்று போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரித்து இருந்தது.
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா தெண்டுல்கரின் டீப்பேக் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பில், சாரா டெண்டுல்கர் அவருடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட செய்தியில், சமூக ஊடகம் நாம் அனைவருக்கும் ஓர் ஆச்சரியமளிக்கும் தளம். நம்முடைய இன்ப, துக்கம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை அதில் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆனால், தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படும்போது, அதனை பார்க்கும் நமக்கு வருத்தம் ஏற்படுகிறது. உண்மை மற்றும் நம்பக தன்மையை விட்டு அது நம்மை தொலைவில் கொண்டு செல்கிறது. என்னுடைய சில டீப்பேக் புகைப்படங்களை நான் பார்க்க நேர்ந்தது. அவை உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.
என்னை போலியாக காட்டுவதற்கு மற்றும் மக்களை தவறாக வழிநடத்துவதற்கான தெளிவான நோக்கத்துடன் ஒரு சில எக்ஸ் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. எனக்கு எக்ஸ் சமூக ஊடகத்தில் கணக்கு எதுவும் இல்லை. இதனை எக்ஸ் சமூக ஊடகம் கவனத்தில் கொண்டு, அந்த கணக்குகளை சஸ்பெண்டு செய்யும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
உண்மையை விலையாக கொடுத்து ஒருபோதும் பொழுதுபோக்கானது, வருவதில்லை. நம்பிக்கை மற்றும் உண்மை அடிப்படையிலான தகவல் தொடர்பை நாம் ஊக்குவிப்போம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.