வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேறியது
2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை இடம்பெற்றது.இதன்போது ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனையடுத்து 45 மேலதிக வாக்குகளால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.இதேவேளை, 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 25 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, நிமல் லன்ஷா, அலி சப்ரி ரஹீம், அனுர பிரதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, அதாவுல்லா ஆகியோர் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.அத்துடன் நாளை புதன்கிழமை (22) முதல் 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளதுடன், வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.