தீபாவளியை கொண்டாட அமெரிக்காவில் இருந்து நெல்லை வந்த தம்பதி விபரீதம்
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவே பலரும் விரும்புவார்கள். சொந்தபந்தங்களுடன் ஜாலியாபேசி மகிழ்ந்து , பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து உறவினர்கள் கொண்டாடுவதற்கு தீபாவளி நாளில் எங்கிருந்தாலும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். அப்படி சொந்த ஊர் வந்த அமெரிக்க தம்பதிக்கு பெரும் சோகம் நடந்துள்ளது.
தீபாவளியை கொண்டாட அமெரிக்காவில் இருந்து நெல்லை வந்தவரின் கார் பிரேக் பிடிக்காமல் ஆதிச்சநல்லூர் கால்வாய் பாலம் அருகே கவிழ்ந்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை பெருமாள்புரம் என்.எச். காலனி 11-வது குறுக்குத்தெருவை சேர்ந்த 78 வயதாகும் நாகராஜன் எனபவரும் இவரது மனைவி உஷா என்பவரும் அமெரிக்காவில் வசித்து வந்தார்கள். இவர்கள் தீபாவளியை கொண்டாடுவதற்காக விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்கள். திங்கள் அன்று இந்த தம்பதி திருச்செந்தூருக்கு காரில் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். நாகராஜன் உஷா தம்பதியின் கார் ஆதிச்சநல்லூர் கால்வாய் பாலம் அருகே வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. மேலும் பிரேக் பிடிக்காததால் பாலத்தில் மோதிய கார் சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விழுந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நாகராஜன்-உஷா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த நாகராஜன்-உஷா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார். உஷா மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.