வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்யாமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
ஷங்ரிலா ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு காலி முகத்திடல் நிலத்தை விற்பனை செய்ததன் பின்னர் எந்தவொரு நிலத்தையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுசன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இருந்தபோதிலும், அரசாங்க வேலைத்திட்டங்களுக்காக எந்த நிலமும் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர், பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், எந்த நேரத்திலும், புறக்கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பெந்தோட்டை, ஹிக்கடுவ, அனுராதபுரம் போன்ற எந்தவொரு புகையிரத நிலையத்திற்கு அருகாமையிலும் புகையிரத நகரம் ஒன்றை (Station Plaza) அமைக்க முதலீட்டாளர்கள் முன்மொழிந்தால், அந்தப் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பித்து அனுமதியைப் பெற்று, அதனை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் கையாள்வதற்காக குழுவொன்றை நியமிப்பேன் என தெரிவித்தார்.