பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்றி திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் : பாடலி சம்பிக்க ரணவக்க
ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாடலி சம்பிக்க ரணவிக்க நேற்று (5) சம்மாந்துறையில் 'கட்டியெழுப்புவோம்' எனும் தலைமைப்பில் பொது மக்களை சந்திக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். இதன் போது அங்கு வருகை தந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
நமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும். கடந்த வருடம் எங்களுக்கு பெற்றோல், உரம், மின்சாரம், கேஸ் என்று எதுமே இருக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எங்களிடம் டொலர் இல்லையென்று கூறப்பட்டது.
வங்கியில் நாங்கள் ஒரு கடனைப் பெற வேண்டுமென்றால் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலமாக வியாபாரத்தை சரியாக செய்யாது விட்டால் கடனை மீளச் செலுத்துவது கடினமாக இருக்கும். அப்போது வங்கி நம்மை வங்குரோத்து அடைந்தவர் என்று கண்டு கொள்ளும்.
இந்நிலையில் கடனுக்காக எமது சொத்தை வங்கியில் வைத்திருந்தால் அதனை வங்கி எடுத்துக் கொள்ளும்.
இது போலவே கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்று வீதிகள், விமான நிலையங்கள் போன்றவற்றை அமைத்தோம். அவற்றால் எமக்கு எந்த இலாபமுமில்லை. அதனால் கடனை அடைக்க முடியாது போனது. நாடு வங்குரோத்தடைந்தது.
எங்களுக்கு கடனாக டொலர்களை தந்தவர்கள் வழங்கு தொடர்ந்துள்ளார்கள். இந்நிலையில் உலக வங்கி கடன்களை தந்தவர்களிடம் நீங்கள் அவசரப்பட வேண்டாம், கடனை தருவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம்.
அதனால் வழக்குத் தொடர வேண்டாமென்று வேண்டியுள்ளது. இப்போது அரசாங்கம் மின்சாரத்தின் விலையையும், பால் மாவின் விலையையும், கேஸ், எரிபொருட்ளின் விலையையும், ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது.
இதைத்தான் அரசாங்கம் செய்கின்றதே ஒழியே உற்பத்தியை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.
ஒரு சில தொழில்களை வழங்கினாலும், கடந்த 3 வருடங்களாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. தொழில் வழங்கினால் சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது.
வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்களினால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களிடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அதிகமான உயிர்களை பலி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்தோம். ஆதலால் நாம் ஒன்றுபட வேண்டும்.
பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்ற வேண்டும். தந்தைக்கு பின் மகன், தாய்க்கு பின் மகள் என்ற அரசியல் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.