பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவையை மீறுவோரின் உறுப்புரிமை இரத்து
பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கென பிரத்யேமாக ஒழுக்கக்கோவை ஒன்றைத் தயாரித்து, அதன்பிரகாரம் அவர்கள் செயற்படவேண்டியது கட்டயமாக்கப்படும். அதுமாத்திரமன்றி இச்சட்டமூலத்தின்கீழ் ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும். எனவே மேற்குறிப்பிட்ட ஒழுக்கக்கோவையை மீறி செயற்படுகின்ற மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அக்குழுவிடம் முறைப்பாடளிக்கமுடியும். அம்முறைப்பாடுகள் தொடர்பில் குறித்த குழு விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படவேண்டிய தண்டனையைத் தீர்மானிக்கும். உச்சபட்சமாக குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் உறுப்புரிமையை நீக்குவதற்கான அதிகாரமும் அக்குழுவுக்கு வழங்கப்படும் என்றார்.