விலையை கட்டுப்படுத்த முடியாமல் போனால், அரிசியை இறக்குமதி செய்யவேண்டியிருக்கும் - வர்த்தக அமைச்சர்
நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டி ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சந்தையில் அரிசியின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வினால் அரிசியின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துவரும் நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும் விற்பனை செய்கின்றனர். இதை நாட்டு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது.
எதிர்காலத்தில் மாவட்டந்தோறும் சென்று நிச்சயமாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வோம். தொடர்ந்தும் விலையை கட்டுப்படுத்த முடியாது போனால் அரிசியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்றார்.