புதிய நாடு, புதிய பொருளாதாரம் ,புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டும் - ஜனாதிபதி
கட்சி ஜனநாயக அரசியலுக்குள் காணப்படும் வேறுபாடுகளை அவ்வண்ணமே தக்கவைத்துக்கொண்டு, புதிய நாடு, புதிய பொருளாதாரம் மற்றும் புதிய அரசியலை கட்டியெழுப்பும் பணியில் சகல அரசியல்வாதிகளும் ஒன்றுபட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு ரோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற "ரீட் மாவத்தையின் நூற்றாண்டு விழா" நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலை கட்டமைப்புக்குள் முன்னெடுத்துச் செல்லப்படும் தரமான கல்வி முறைமையை பாராட்டிய ஜனாதிபதி, இதில் ரோயல் கல்லூரிக்கு முக்கிய பங்கு உண்டு எனவும் நாட்டிற்காக கடமையாற்ற ரோயல் கல்லூரியினர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்வந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வின் அடையாளமாக வெளியிடப்பட்ட நூலின் முதல் பிரதியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது.