அம்பிட்டிய சுமனரத்ன தேரரால் நேற்று மீண்டும் பதற்றம்
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள சிங்கள மயானத்தில் வீடு உடைத்த கழிவுப்பொருட்கள் போடப்பட்டுள்ள நிலையில், அங்குவந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதற்கு எதிராக கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை கொண்டு பேசினார்.இதன்போது அப்பகுதிக்கு வந்த பொலிஸார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து செல்லவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.குறித்த பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன்பாக குறித்த கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்ட நிலையில், அவற்றினை அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக மாநகரசபை ஆணையாளர், சுமனரத்ன தேரரிடம் நேற்று தெரிவித்திருந்தாகவும் எனினும் அவர் இன்று அங்கு சென்று இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.குறித்த கட்டிட இடிபாடுகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.எனினும் இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடைய சகாக்களும் அங்கிருந்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததுடன் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை வௌியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.